சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள் என தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர உதவிக்கு 1070 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.







